செய்திகள்
அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ்

குற்றச்சாட்டு கூறிய கொரோனா நோயாளியை சந்தித்த அமைச்சர்

Published On 2020-08-09 23:37 GMT   |   Update On 2020-08-09 23:37 GMT
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை குறித்து குற்றச்சாட்டுகள் கூறிய நோயாளிகளை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் நேரில் சந்தித்து பேசினார்.
புதுச்சேரி:

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுக்க முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சரியான வசதிகள் செய்யப்படவில்லை என்றும் கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்து நோயாளி நாகராஜ் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ஆஸ்பத்திரியில் உள்ள குறைபாடுகள் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவற்றை உடனடியாக சரி செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அங்கு இருந்த கழிவறை உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது. அமைச்சரின் இந்த செயலைப் பாராட்டி நாகராஜ் மீண்டும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News