செய்திகள்
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீனவர்கள் தங்கியிருந்த 6 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஏற்பட்ட தீ விபத்தில் மீனவர்கள் தங்கியிருந்த 6 கூரை வீடுகள் எரிந்து நாசமாகின.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலத்தில் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான படகுகளுடன் ஏராளமான மீனவர்கள் இங்கு வந்து தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்வது வழக்கம்.
இவர்கள் தங்குவதற்காகவும், சமையல் செய்து சாப்பிடுவதற்காகவும் கடற்கரை ஓரத்தில் கூரை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது மீன்பிடி சீசன் இல்லாத காரணத்தால் இங்கு தங்கி இருந்த மீனவர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த வீடுகளை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கூரை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத்துறை அலுவலர் கந்தசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். மீனவர்கள் யாரும் அங்கு தங்கி இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் 6 கூரை வீடுகளும் எரிந்து நாசமடைந்தன. இதன் சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதே போல் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருஞானம்(வயது50). விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் தனது கூரை வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீடு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்டு அனைவரும் வீட்டில் இருந்து வெளியே ஓடினர். தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதன் சேதமதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.