செய்திகள்
மணல்மேடு அருகே மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது
மணல்மேடு அருகே மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மணல்மேடு:
நாகை மாவட்டம் மணல்மேடு அருகே பொய்கைகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா(வயது 40). இவர் மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு மாத விடுப்பில் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இளையராஜா தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது அதே தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் இளையராஜாவிற்கு சொந்தமான மரத்தின் கிளைகளை வெட்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை இளையராஜா தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து இளையராஜாவை அரிவாளால் வெட்டியதுடன், கத்தியால் குத்தியதாகவும் தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசன்(21) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அதே தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன், இவருடைய மனைவி இந்திரா, மகன் ராஜேஷ், மருமகள் பார்வதி ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.