செய்திகள்
கொரோனா பரிசோதனை

'விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள்' கொரோனா சிகிச்சை சரியில்லை என நோயாளி கதறல் - சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

Published On 2020-07-30 09:24 GMT   |   Update On 2020-07-30 09:24 GMT
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை சரியில்லை, என்னை விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என நோயாளி கதறும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில், கொரோனா நோயாளிகளுக்கு ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் வீடியோ ஒன்றினை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதில் முககவசம் அணிந்தபடி அந்த நோயாளி கதறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நான் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவன். கொரோனா தொற்றால் நான் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த ஒரு வாரமாக இங்கு உள்ளேன். எனது தந்தையும் இங்கு தான் சிகிச்சையில் உள்ளார். நெஞ்சுவலிக்காக சிகிச்சைக்கு வந்தபோது அவருக்கு கொரோனா என சொல்லி, எங்களையும் சேர்த்து உட்கார வைத்து விட்டார்கள். எனது அப்பாவுக்கு நெஞ்சுவலிக்கான சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

அவர் ரொம்ப மோசமான நிலைமைக்கு சென்று கொண்டு இருக்கிறார்.

இங்கு 4 மாத்திரைகள் மற்றும் சாப்பாடு கொடுக்கிறாங்க அவ்வளவு தான். சாப்பாடும் ஒன்னும் சரியில்லாமல் மோசமாக தான் உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் எல்லோரிடமும் பேசி விட்டேன். யாரும் எந்தவித சிகிச்சையும் கொடுக்கவில்லை. நாங்க 4-வது தளத்தில் உள்ளோம்.

எனது அப்பா 2-வது தளத்தில் சிகிச்சையில் உள்ளார். எனது அப்பா எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை, அவரது அருகில் சிகிச்சை பெற்று வரும் சக நோயாளிகளிடம் வீடியோ காலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சிகிச்சை சரியாக கொடுக்கப்படுவதில்லை. எல்லா உயர்அதிகாரிகளிடமும் பேசியும் பலனில்லை. கொரோனா வார்டில் நடக்கிறது அநீதி தான்.

எங்களை கூட்டி வந்து சித்ரவதைப்படுத்துவதற்கு பதிலாக எங்க அப்பாவுக்கோ, எங்களுக்கோ விஷ ஊசி போட்டு கொன்றுவிடலாம். இப்படி சித்ரவதை செய்யாதீங்க. ஒழுங்கா சிகிச்சை கொடுத்து எங்களை வீட்டுக்கு அனுப்பி வைங்க. இது தான் நான் அமைச்சர்களிடமும், அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்வது.

இவ்வாறு அதில் பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை தொடர்பாக நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து டீன் மீனாட்சி சுந்தரத்திடம் கேட்டபோது, “அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் அவர் கூறுவது முற்றிலும் தவறானது. ராணியார் அரசு மருத்துவமனையில் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர், கீரனூர் பகுதியில் இருந்து வந்து சேர்ந்திருக்கிறார். அவரிடம் நான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இதேபோல மருத்துவ குழுவினரும் அவரிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர். அப்போது அவர் குறை எதுவும் சொல்லவில்லை. அவர் எதற்காக இதுபோன்ற கருத்தை வைத்து வீடியோ வெளியிட்டார் என தெரியவில்லை. அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பரிந்துரை செய்திருந்தார். நாங்களும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம். அதற்கு அந்த அரசியல் கட்சி பிரமுகரும் நன்றி தெரிவித்து குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அந்த வாலிபருக்கு மட்டுமில்லை, மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
Tags:    

Similar News