செய்திகள்
விக்கிரமங்கலத்தில் கொள்ளை நடந்த வீட்டையும், வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததையும் படத்தில் காணலாம்.

விக்கிரமங்கலத்தில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

Published On 2020-07-25 17:20 IST   |   Update On 2020-07-25 17:20:00 IST
விக்கிரமங்கலத்தில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம்(வயது 72). தபால் ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தா(68). நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டனர். பின்னர் நேற்று அதிகாலை எழுந்த வசந்தா வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. தொடர்ந்து பீரோவில் பார்த்தபோது நகைகள், வெள்ளிபொருட்கள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

உடனே அவர் இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 32 பவுன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News