செய்திகள்
ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

Published On 2020-07-24 18:49 IST   |   Update On 2020-07-24 18:49:00 IST
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பழூர், கோடாலிகருப்பூர், தென்கச்சி பெருமாள்நத்தம், சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட தா.பழூர் மற்றும் ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் பருத்தி பயிரிட்டுள்ளனர். விளைந்த பருத்தியை கடந்த ஒரு வாரமாக ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் கொண்டுவந்திருந்த பருத்திக்கு அரசு நிர்ணயித்துள்ள ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 500 அடிப்படையில் ஈரப்பதம் அறிந்து விலை கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் நேற்று கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகளில் ஈரப்பதம் குறைவாக உள்ள மூட்டைக்கு குறைந்த விலையும், ஈரப்பதம் அதிகமாக உள்ள மூட்டைக்கு அதிக விலையும் நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு அதிகாரிகளை கண்டித்தும், ஈரப்பதம் கண்டறியும் கருவி மூலம் பருத்தியை தரம் பிரித்து தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய விலை பெற்றுத்தருவதாக போலீசார் கூறியதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் திருச்சி- சிதம்பரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News