செய்திகள்
கோட்டாட்சியர் முன்னிலையில் போலீஸ்காரர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்

இருதரப்பு மோதல் சம்பவம்: சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் கோட்டாட்சியர் முன் ஆஜராகி விளக்கம்

Published On 2020-07-24 13:36 IST   |   Update On 2020-07-24 13:36:00 IST
இருதரப்பு மோதல் சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் கோட்டாட்சியர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
புதுக்கோட்டை:

அரிமளம் அருகே உள்ள போசம்பட்டியில் சம்பவத்தன்று இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது கே.புதுப்பட்டி போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பயனளிக்காத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டார். இதனால் அங்கிருந்த கூட்டம் சிதறி ஓடியது. இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் இருதரப்பையும் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் என்ன? எதற்காக வானத்தை நோக்கி சுடப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இதன்படி நேற்று முன்தினம் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி அந்த கிராமத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 3 போலீசாரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அளித்தார்.

அதன்படி நேற்று, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 3 போலீசாரும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தனர். மேலும் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆயுத அறை போலீசார் வினோத் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரையும் விசாரணை செய்ய கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி முடிவு செய்து, அவர்களையும் வரவழைத்தார்.

இதையடுத்து 5 பேரும் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி முன்னிலையில் தனித்தனியாக ஆஜராகி, நடந்த சம்பவம் குறித்தும் துப்பாக்கி சூடு நடந்த விதம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இதில், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆஜரானபோது, சம்பவ இடத்திற்கு சென்றபோது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் வானத்தை நோக்கி நான் துப்பாக்கியால் ஒருமுறை சுட்டேன். ஆனால் துப்பாக்கியால் சுடுவதற்கு எந்தவிதமான முன் அனுமதியோ, உயர் அதிகாரிகளுக்கு தகவலோ நான் தெரிவிக்கவில்லை. வேறுவழியின்றி தற்காப்பிற்காக வானத்தை நோக்கி ஒரு முறை சுட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, என்று விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்படும் என்று கோட்டாட்சியர் தெரிவித்தார்.

Similar News