செய்திகள்
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுபாட்டில்கள் வாங்க முடியாமல் மதுபிரியர்கள் தவித்தனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் சிலர் இறந்தனர். இந்த நிலையில் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை டாஸ்மாக் கடை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த கடைகள் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர், ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., அண்ணா தொழிற்சங்கத்தினர் உள்பட 5 தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்று காலை திரண்டனர். காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்காமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்ததும் மதுபானம் வாங்கலாம் என நினைத்து வந்த மதுபிரியர்கள் கடை திறக்கப்படாததால் தவிப்புக்குள்ளாகினர். டாஸ்மாக் கடையின் அருகே ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். கடையை எப்போது திறப்பார்கள், எப்போது மது வாங்கி செல்வது என்ற ஏக்கத்தில் தவித்தனர். காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை 2 மணி நேரம் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிந்த பின் மதுபிரியர்கள் சிலர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பகல் 12 மணிக்கு பின் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை திறந்து மதுபான விற்பனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 153 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் அனைத்து கடைகளும் 2 நேரம் அடைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றதாகவும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிவன்மூர்த்தி தெரிவித்தார். ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தால் நேற்று காலை 2 மணி நேரம் மதுபானம் விற்பனை பாதிக்கப்பட்டது.