செய்திகள்
கோப்புபடம்

அன்னவாசலில் ஒரே குடும்பத்தில் சிறுவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா

Published On 2020-07-19 19:51 IST   |   Update On 2020-07-19 19:51:00 IST
அன்னவாசலில் ஒரே குடும்பத்தில் சிறுவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று சற்று குறைந்திருந்தது. நேற்று 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 941 ஆக உள்ளது. இதுவரை 523 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 407 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னவாசலை சேர்ந்த ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் இறந்தார். அவருடைய உடல் உறவினர்களிடம் வழங்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டுதான் இறந்தார் என்று மறுநாள் காலை சுகாதாரத்துறை மூலம் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இறந்தவரின் குடும்பத்தினர் உள்பட பலர் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று பரிசோதனை முடிவு வந்த நிலையில், இறந்தவர் குடும்பத்தில் சிறுவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் முக்கண்ணாமலைப்பட்டியில் கொரோனா பாதிப்பால் 18 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மட்டுமே திறக்கப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.

கறம்பக்குடி பகுதியில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 2 பேர், மானியவயல் கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி, தனியார் நிதி நிறுவன மேலாளர் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கறம்பக்குடியில் 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கீரனூர் மேலப்புதுவயல் ரோடு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்து சென்றுள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதால், பரிசோதனை செய்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் ஒடுக்கூர் கிராமத்தில் 55 வயது காங்கிரஸ் பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கீரனூர் பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அண்டக்குளம் சுகாதார மையத்தில் இருந்து டாக்டர் செவிலியர் குழுவினர் வீடு, வீடாக சென்று இன்று(ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனை நடத்துகின்றனர்.

அரிமளம், ராயவரம் கிராமத்திற்கு சென்னையில் இருந்து வந்த 2 பேர், கடையக்குடி ஊராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரிமளம், ராயவரம், கடியாபட்டி ஆகிய ஊர்களில் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 36 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News