செய்திகள்
அமைச்சர் கேசி வீரமணி

வேலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் வரை ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளது- அமைச்சர் தகவல்

Published On 2020-07-19 19:18 IST   |   Update On 2020-07-19 19:18:00 IST
கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்தால், வேலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) வரை ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
குடியாத்தம்:

குடியாத்தம் வந்த அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. சென்னையில் இருந்தும், வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் வந்ததால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கையை எடுத்திருந்தோம். ஆனால் சென்னையில் இருந்தும், வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் வரத்து மேலும் அதிகரித்ததால் வேலூர் மாவட்டத்திலும், குடியாத்தத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்துக் நடக்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகம். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் கொரோனா தொற்றால் ஒரு உயிரை கூட இழக்க தயாராக இல்லை எனக் கூறி உள்ளார். அதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

தொடர்ந்து குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்தால், இப்பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கூடுதலாக இருக்கும். இது, அடுத்த மாதம் (ஆகஸ்டு) வரை இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பத்திரப்பதிவு துறையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாலும், வெளியில் இருந்து பொதுமக்கள் வராததாலும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தமிழக அரசு வருவாய் இழப்பை சமாளித்து வருகிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுடன் தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கம் எனச் சமூக ஆர்வலர்கள் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அதற்கு தகுந்த மாதிரி ஊரடங்கு இருக்கும். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்தால் ஆகஸ்டு மாதம் வரை ஊரடங்கை அமல் படுத்த வாய்ப்புள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Similar News