செய்திகள்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

கடலூர் மாவட்டத்தில் 46 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம்

Published On 2020-07-16 07:35 GMT   |   Update On 2020-07-16 07:35 GMT
கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படித்து வரும் 46 ஆயிரத்து 278 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
கடலூர்:

கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. கல்வி தொலைக்காட்சியின் மூலமாக வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 2½ மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பையும், பிறவகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பையும், பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டந்தோறும் மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. கடலூர் மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு உதவி தலைமை ஆசிரியை சுமதி பாடப்புத்தகங்களை நேற்று வழங்கினார். முன்னதாக புத்தகங்களை பெறவந்த மாணவிகள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து புத்தகங்களை வாங்கி சென்றனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 145 மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் 21 ஆயிரத்து 897 மாணவ-மாணவிகள், 296 உயர்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் 24 ஆயிரத்து 381 மாணவ-மாணவிகள் என மொத்தம் 46 ஆயிரத்து 278 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

ஒரு மணி நேரத்தில் 20 மாணவ-மாணவிகள் என்ற அடிப்படையில் மட்டுமே பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாகவும், இதுபற்றி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் முன்கூட்டியே அந்தந்த பள்ளிகள் மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வருகிற 19-ந் தேதிக்குள் அனைத்து பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News