செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை செய்து கொலை: கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

Published On 2020-07-02 13:38 GMT   |   Update On 2020-07-02 13:38 GMT
அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை நேற்றுமுன்தினம் இரவில் இருந்து காணவில்லை. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடிவந்தனர்.

அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News