செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு- ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தகவல்

Published On 2020-07-01 04:56 GMT   |   Update On 2020-07-01 04:56 GMT
பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியேற்றுவதால் சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை:

காலநிலை மாற்றம் திட்டத்தின் (எஸ்.பி.எல்.ஐ.சி.இ.) கீழ் கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான அவசியம் குறித்து சென்னை ஐ.ஐ.டி.யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங்களில் நடத்தப்பட்டன. சென்னையை பொறுத்தவரை கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், அப்போது இருந்த பருவநிலை மாற்றம் ஆகியவற்றை குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.

ஆராய்ச்சியின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது, பசுமை இல்ல வாயுக்கள்(கிரீன் ஹவுஸ் கேசஸ்) அதிகளவில் தற்போது வெளியேறுவதாகவும், இதன் தாக்கம் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை தொடர்ந்து அதிகரிக்க வைப்பதாகவும், இந்த பருவநிலை மாற்றங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முடிவுகள் தெரியவந்துள்ளன.

அந்த வகையில், பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியேற்றும் முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடரும் பட்சத்தில், சென்னையில் வரும் ஆண்டுகளில் அதிகமாக மழைப்பொழிவை உண்டாகி, மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர்கள் கணிக்கின்றனர். இதை கட்டுப்படுத்தாவிட்டால், சென்னையில் ஓரிருநாட்கள் பெய்யும் கனமழையால் ஏற்படும் பெருவெள்ளதால் நகரம் பாதிப்படையும் என்றும் அந்த ஆராய்ச்சியில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News