செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூரில் ஒரே நாளில் மின்வாரிய பொறியாளர் உள்பட 16 பேருக்கு கொரோனா

Published On 2020-06-15 13:01 IST   |   Update On 2020-06-15 13:01:00 IST
வடசென்னை மின்வாரியத்தில் பணியாற்றிய வேலூரை சேர்ந்த பொறியாளர் உள்பட 16 பேர் ஒரே நாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை 181 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மின்வாரிய பொறியாளர், ஒருவயது பெண் குழந்தை, எல்லை பாதுகாப்புப்படை வீரர் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வேலூரை அடுத்த சித்தேரியைச் சேர்ந்தவர் 55 வயது ஆண். இவர் வடசென்னை மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை.

பின்னர் சளி, இருமல் காரணமாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சளிமாதிரி சோதனை செய்தார். அதில், நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரின் குடும்பத்தினர் 3 பேரும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வேலூர் மண்டித்தெருவில் அரிசி கடை நடத்தி வந்த வேலப்பாடியை சேர்ந்த வியாபாரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று அந்த கடையில் பணிபுரிந்த வேலப்பாடியை சேர்ந்த 64 வயது முதியவர், சேண்பாக்கத்தை சேர்ந்த 29 வயது வாலிபர் ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்த மேல்பாடி மின்சார வாரிய காலனியை சேர்ந்த 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தனர். 3 பேருக்கும் சளிமாதிரி பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்றால் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோன்று அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீரராக பணியாற்றி விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய 35 வயது வாலிபர், சைதாப்பேட்டையை சேர்ந்த 35 வயது வாலிபர், மேட்டுபாளையம் 70 வயது முதியவர், காட்பாடி பாரதிநகரை சேர்ந்த இளம்பெண், காட்பாடி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்த 26 வயது வாலிபர், வள்ளலாரை சேர்ந்த 39 வயது ஆண், சேண்பாக்கத்தை சேர்ந்த 64 வயது முதியவர், சத்துவாச்சாரியை சேர்ந்த 27 வயது வாலிபர், காட்பாடி செங்குட்டையை சேர்ந்த ஒருவயது பெண்குழந்தை, வடுகந்தாங்கலை சேர்ந்த 50 வயது ஆண் ஆகிய 16 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16 பேருடன் பழகிய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News