செய்திகள்
பெண் மந்திரவாதி கைது வசத்தி

கந்தர்வகோட்டைசிறுமி நரபலி சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது - பரபரப்பு தகவல்கள்

Published On 2020-06-09 18:21 IST   |   Update On 2020-06-09 18:21:00 IST
கந்தர்வகோட்டை சிறுமி நரபலி சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த வித்யா(வயது 13) கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக அவளது தந்தை பன்னீர் (41), உறவினர் குமார் ஆகியோரை கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்தனர். குடும்ப பிரச்சினை மற்றும் பணத்தேவையை சமாளிக்க பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு வித்யாவை, பன்னீர் நரபலி கொடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தியை (46) போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவரிடம் இருந்து ஒரு கார், செல்போன், மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய், கருப்பு மை, வெள்ளி தாயத்து, வெள்ளி ருத்ராட்ச மாலை, பாசி மாலை, 13 கோழிகள், 56 பக்கம் கொண்ட மாந்திரீக கையேடு, எரித்த மரத்துண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைதான மந்திரவாதி வசந்தி பற்றி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

மந்திரவாதி வசந்தி வசியம் செய்வதை தொழிலாக கொண்டு செயல்பட்டுள்ளார். பிறரை முடக்குவது, தொழில்களில் நஷ்டமடைய செய்வது, கை, கால்களை இழக்க வைப்பது, பெண்களை ஆண்களுக்கு வசியம் செய்ய வைப்பது உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு செயல்பட்டுள்ளார். ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வசியம் செய்வாராம். அவரிடம் இருந்து பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படங்கள் நிறைய கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்களில் உள்ளவர்களை தனது மாந்திரீகம் மூலம் வசியம் செய்துள்ளார்.

பெண் மந்திரவாதியுடன் பன்னீருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. நீண்டநாட்களாக தொடர்பில் இருந்ததால் தனக்கு பணத்தேவையை தீர்க்க ஆலோசனை கேட்டபோது நரபலி விவரத்தை கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்டுள்ளாள். இதேபோல் வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனரா? என்பது புலன் விசாரணையில் உள்ளது. வெவ்வேறு ஊர்களிலும் இதேபோல மாந்திரீக தொழிலில் மந்திரவாதி வசந்தி வசியம் செய்துள்ளார். மந்திரவாதி வசந்தியை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், 8 தனிப்படைகளை அமைத்து நேரடி விசாரணையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான வசந்தியை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Similar News