செய்திகள்
கொலை

சிதம்பரத்தில் காதலி வீட்டில் வாலிபர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-06-06 03:13 GMT   |   Update On 2020-06-06 03:13 GMT
சிதம்பரத்தில் காதலி வீட்டில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அன்பழகன்(வயது 21). இவரும், சிதம்பரம் அரங்கநாதர் நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவியும் ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்பழகனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த மாணவி, அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் அன்பழகன் நேற்று இரவு காதலி வீட்டில் உள்ள ஒரு அறையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது 2 கைகளும் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அவரது தலையின் பின்புறம் வெட்டு காயங்கள் இருந்தன. ஆனால் அந்த வீட்டில் மாணவியோ, அவரது குடும்பத்தினரோ யாரும் இல்லை.

ஆனால் வீட்டின் கதவு திறந்து இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு அன்பழகன், கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அன்பழகனின் உடலை கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காதல் தகராறில் அன்பழகனை சிலர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததும், பின்னர் அவரது உடலை வீட்டின் ஒரு அறையில் போட்டுவிட்டு தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறுகையில், காதலி வீட்டில் அன்பழகன் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். ஆனால் காதலியின் குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர். ஆகவே தலைமறைவாக உள்ள காதலியின் குடும்பத்தினரை பிடித்து விசாரணை நடத்தினால் தான் அன்பழகன் கொலைக்கான காரணம் தெரியவரும். மேலும் தலைமறைவாக உள்ள காதலியின் குடும்பத்தை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News