செய்திகள்
திருமணம்

தாலி கட்டும் நேரத்தில் கணவனின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்திய பெண்

Published On 2020-06-03 09:28 GMT   |   Update On 2020-06-03 09:28 GMT
தாலி கட்டும் நேரத்தில் தனது கணவரது 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் மேட்டு இடையம்பட்டி ரோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது45), தொரப்பாடியில் டெய்லர் கடை வைத்துள்ளார்.

இவருடைய மனைவி கமலி. தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ராமச்சந்திரன் கமலி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்தநிலையில் கரூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தொரப்பாடியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்தபோது ராமச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது.

ராமச்சந்திரன் அந்த இளம் பெண்ணை 2 வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இன்று காலை அடுக்கம்பாறை அருகே உள்ள ஓசூர் அம்மன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்று காலையில் கோவிலில் பூஜை செய்து தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கமலி அவரது மகன்களுடன் கோவிலுக்கு சென்றார் .அப்போது மணக்கோலத்தில் இருந்த கணவனை கண்டு அவர் திடுக்கிட்டார். அங்கிருந்தவர்களிடம் எடுத்துக்கூறி கணவரது திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

இதனால் கமலிக்கும் 2 வது திருமணத்திற்கு வந்திருந்த பெண் வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

மேலும் இது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கமலி புகார் அளித்தார்.

அனைத்து மகளிர் போலீசார் ராமச்சந்திரன் மற்றும் இளம்பெண் உறவினர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். அப்போது ராமச்சந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News