செய்திகள்
வாழைகள் நாசம்

விருத்தாசலத்தில் பயங்கர சூறாவளி- 50 ஏக்கர் வாழைகள் நாசம்

Published On 2020-05-22 18:34 IST   |   Update On 2020-05-22 18:34:00 IST
விருத்தாசலம் அடுத்த சின்ன வடவாடி, பெரியவடவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் 50 ஏக்கர் வாழைகள் நாசமானது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மேக மூட்டம் ஏற்பட்டு திடீரென அவ்வப்போது காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த முந்திரி, பலா, மா உள்ளிட்ட மர வகைகள் ஆங்காங்கே வேரோடு சாய்ந்தன. மேலும் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் அனைத்தும் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்த மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இதனால் சில கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர். நேற்று மாலை திடீரென விருத்தாசலம் அடுத்த சின்ன வடவாடி, பெரியவடவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த காற்றில் குலை தள்ளி இருந்த நிலையில் வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்தன. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News