செய்திகள்
தேர்வு

பண்ருட்டி பகுதியில் 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்

Published On 2020-05-21 14:10 GMT   |   Update On 2020-05-21 14:10 GMT
பண்ருட்டி, புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வுக்காக தூய்மை பணி நடந்து வருகிறது.
பண்ருட்டி:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் உலுக்கியது. எனவே கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

இந்த உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்ததால் அரசு பள்ளிகள், கோவில்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

ஆனாலும் கொரோனா வைரஸ் இன்னும் குறைந்தபாடில்லை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரசை தடுக்க கடுமையாக போராடி வருகிறது. கடந்த 50 நாட்களுக்கு மேலாக அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தூசி படிந்து காணப்படுகிறது.

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, விடுபட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வு பாடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி வருகிற 15-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பண்ருட்டி, புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மை பணி நடந்து வருகிறது. பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், பெஞ்ச் ஆகியவற்றை ஊழியர்கள் சுத்தப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது.

Tags:    

Similar News