செய்திகள்
கோப்பு படம்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த முகமூடி கொள்ளையன்

Published On 2020-05-18 17:10 IST   |   Update On 2020-05-18 17:10:00 IST
ஸ்ரீமுஷ்ணம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த முகமூடி கொள்ளையன்

ஸ்ரீ முஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வல்லியம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 45). விவசாயி. இவரது மனைவி ராதிகா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலையில் ராதிகா தனது மகனுடன் காட்டுமன்னார்கோவில் அருகே பாப்பாக்குடியில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றார்.

விருத்தாசலம் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த வாலிபர் வந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் ராதிகா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்தார்.

அதிர்ச்சி அடைந்த ராதிகா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த கொள்ளையன் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டான். உடனே போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அப்போது போலீசார் வாகனத்துக்கு எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பதட்டம் அடைந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராதிகாவிடம் நகை பறித்ததும், ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள நெடுஞ்சேரி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24) என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்ச் செல்வனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 பவுன் தாலி செயின் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையனை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகும்அமீதை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பாராட்டினார்.

Similar News