செய்திகள்
கோப்பு படம்

முதல் முறையாக தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

Published On 2020-05-08 14:41 IST   |   Update On 2020-05-08 14:41:00 IST
முதல் முறையாக தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:

புதுவையில் மதுபாட்டில்கள் குறைந்த விலைக்கு விற்பதாலும், தரமான மது கிடைப்பதாலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு மது குடிக்க வருவது வழக்கம்.

மேலும் புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்களை கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பதும் உண்டு.

தற்போது ஊரடங்கு உத்தரவினால் புதுவையில் சாராய கடை உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் புதுவையை சேர்ந்தவர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள்.

அதேவேளையில் தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் புதுவையை சேர்ந்த மதுபிரியர்கள் அருகில் உள்ள விழுப்புரம் பகுதிக்கு சென்று தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் மது பாட்டில்கள் வாங்கி வந்து மதுகுடித்தனர்.

இந்த நிலையில் முதல் முறையாக தமிழக பகுதியில் இருந்து புதுவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த சம்பவம் நடந்துள்ளது.

திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை திருக்கனூர் எல்லை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது மோட்டார்சைக்கிள் பெட்டிகளில் 24 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 45), கோ. மணவெளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (42) என்பதும் இவர்கள் விழுப்புரம் அருகே கெடார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்க கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Similar News