வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வந்த 3,648 பேர் கண்காணிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தின் எல்லைகளில் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து 1,516 பேர் வந்துள்ளனர். இதில் 10 பேர் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்தவர்கள். சென்னையில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 600 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. கோயம்பேட்டில் இருந்து வந்த 10 பேர் உள்பட மேலும் 80 பேருக்கு இன்னும் முடிவுகள் வரவில்லை.
வெளியூர்களிலிருந்து வந்த அனைவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியே சாலைகளில் சுற்றித் திரியக் கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பொதுமக்கள் 1077 , 0416 - 2258016 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 2132 பேர் வந்துள்ளனர். அவர்கள் 21 இடங்களில் அமைந்துள்ள சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். எனப்படும் கொரோனா கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் மட்டும் ஆஸ்பத்திரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
பாதிப்பு இல்லை என தெரிய வரும் நபர்கள் அவருடைய வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனாலும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் சுயகட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.