செய்திகள்
கீழ்வேளூர் அருகே காருதாகுடியில் ஒருவருக்கு மருந்து பொருட்களை அதிகாரிகள் வழங்கியபோது எடுத்தபடம்.

கீழ்வேளூர் பகுதியில் காசநோயாளிகளுக்கு மருந்து பொருட்கள் வீடு தேடிச்சென்று வினியோகம்

Published On 2020-05-03 19:31 IST   |   Update On 2020-05-03 19:31:00 IST
கீழ்வேளூர் பகுதியில் காசநோயாளிகளுக்கு மருந்து பொருட்கள் வீடு தேடிச்சென்று வினியோகம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான காசநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மாதந்தோறும் மருத்துவமனைக்கு சென்று மருந்துகளை வாங்கி செல்வர். தற்போது ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியில் நடமாட இயலவில்லை. வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் காசநோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று மருந்துகளை பெற முடியாமல் அவதிக்கு ஆளாயினர். இதையடுத்து சுகாதார துறையினர் காசநோயாளிகளுக்கு மருந்து பொருட்களை அவர்களுடைய வீடு தேடிச்சென்று வினியோகம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் தமிழ்செல்வம், கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, அவர்களுக்கு 2 மாதங்களுக்கான மருந்து பொருட்களை வழங்கினர்.

அப்போது வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி அங்கிருந்த மக்களிடம் கூறுகையில்:-

உடலில் புதிதாக கட்டிகளோ, வலியோ ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது. அவை உள்ளுக்குள் ஏற்பட்டிருக்கும் இன்னொரு நோயின் அறிகுறியாக இருக்க கூடும். எனவே உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து அதற்கான சோதனைகளை செய்து சிகிச்சை பெற வேண்டும்.

காசநோயாளிகள் தவறாமல் மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும். இது போன்ற இக்கட்டான நேரங்களில் மருந்துகளை சாப்பிட இயலாமல் போக வாய்ப்புள்ளது. இதனால் நோய் தீவிரம் அதிகமாகும். சிலர் முகவரி மாற்றத்தை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு மட்டும் மருந்துகளை வழங்க இயலவில்லை. எனவே அவர்கள் உடனடியாக முகவரி மாற்றத்தை மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் சுகாதாரத்துறை மருந்துகளை நேரில் வழங்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Similar News