மயிலாடுதுறை அருகே ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பியவருக்கு கொரோனா
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை, சீர்காழி, மயிலாடுதுறை, பொறையாறு, திருவெண்காடு போன்ற பகுதியை சேர்ந்த 45 பேர் ஆன்மிக சுற்றுலாவுக்காக வெளி மாநிலங்களுக்கு சென்றனர்.
ஊரடங்கால் திரும்ப முடியாமல் தவித்தன்ர். இதில் 35 பேர் ஒரு வேன் பிடித்து கடந்த மாதம் 25-ம் தேதி ஊருக்கு திரும்பினர்.
அதில் திருவெண்காடு பகுதியை சேர்ந்த 2 நபர்களும், மயிலாடுதுறை சாவடி பகுதியை சேர்ந்த ஒருவரும் கடந்த 10-ம் தேதி மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சென்று கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். இதில் சாவடிபகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவரை நேற்று திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனிமை படுத்தியுள்ளனர்.
சாவடி கிராமத்தை சுகாதார துறையும் காவல்துறையும் தங்கள் கட்டுபாட்டில் வைத்து தகரத்தை கொண்டு அடைத்துள்ளனர்.
சாவடியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கர்நாடகாவில் இருந்து வேன்பிடித்து வந்த 35 பேரில் 3 பேர் கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தினர். மீதம் உள்ள 32 பேரை சோதனை செய்ய அவர்களை சுகாதார அதிகாரிகள் தேடி வருகின்றனர்.