செய்திகள்
படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.

ஊரடங்கால் பழையாறு மீன்பிடி துறைமுகம் முடங்கியது: மீனவர்கள், தொழிலாளர்கள் வருவாயின்றி தவிப்பு

Published On 2020-05-01 20:48 IST   |   Update On 2020-05-01 20:48:00 IST
ஊரடங்கால் பழையாறு மீன்பிடி துறைமுகம் முடங்கியது. இதனால் மீனவர்கள், தொழிலாளர்கள் வருவாயின்றி தவிக்கின்றனர்.
கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினமும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். இந்த துறைமுகத்தின் மூலம் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். மீன் மற்றும் கருவாடு விற்பனை செய்வதிலும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பழையாறு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் பழையாறு மீன்பிடி துறைமுகம் முடங்கியதோடு, மீனவர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். மேலும், கருவாடு விற்பனையும் நடைபெறாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மீன்பிடி தடைகாலமும் அமலில் இருப்பதால் மீனவர்கள் மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் மீன்பிடித்தொழிலை நம்பி வாழும் நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். அரசு கொடுத்த ரூ.1,000 நிவாரண தொகை மிக குறைந்த தொகையாகும். எனவே பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News