வேலையில்லா நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்- விவசாய தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
புதுச்சேரி:
அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் சங்க அலுவலகம், வீடுகள், விவசாய நிலங்களில் கோரிக்கை தட்டிகளுடன் போராட்டம் தொடங்கியது இன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிககள் ஆறுமுகம், ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை ஏ.ஐ.சி. சி.டி.யூ. மாநில தலைவர் மோதிலால் தொடங்கி வைத்தார். தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஊரக வேலை நாட்களை 200 ஆகவும், சம்பளத்தை ரூ.500 ஆகவும் உயர்த்த வேண்டும். கட்டுமான தொழிலார் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் 3 மாதத்திற்கு தேவையான காய்கறி, உணவு பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலையில் விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டம் நாளையும் தொடர்கிறது.