செய்திகள்
ரோபோ செயல்பாடுகள் குறித்து விளக்கிய மாணவர்கள்

கொரோனா வார்டில் செவிலியர் பணி செய்யும் ரோபோ

Published On 2020-04-28 19:56 IST   |   Update On 2020-04-28 19:56:00 IST
கொரோனா வார்டில் செவிலியர் பணிகளை செய்யும் ரோபோவை விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்வி மையத்தில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களால் செவிலியர்கள் பணிகளை செய்யும் ரோபோவை உருவாக்கி உள்ளனர். பல்கலைக்கழக வேந்தர் கணேசன் உத்தரவின் பேரில் மாணவர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர்.

வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கு காய்ச்சலின் அளவை கண்டறிவது, மருந்துகள் அளிப்பது, கிருமிநாசினி வழங்குவது உள்ளிட்ட பணிகளை இந்த ரோபோ மூலம் செய்யலாம். அது மட்டுமின்றி சிகிச்சை பெறுபவர்களிடம் காணொலி காட்சி மூலம் நேரடியாக உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளலாம். நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்லாமலேயே அவர்களுக்கு உணவு வழங்க முடியும்.

இந்த ‘ரோபோ’ செல்போன் செயலியின் மூலம் இயக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்கள் அவசர உதவிக்கு செவிலியரை அழைக்கவும் இதில் வசதியும் உள்ளது. இந்த ரோபோ புளூ டூத் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. இது குறித்த செயல் விளக்கம் நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயாசிங், துணைப்பதிவாளர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறும்போது, ‘இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவ துறையில் உபயோகமானதாக இருக்கும். இதன் செயல்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் பார்வையிடுவார்கள். அதன் செயல்பாடுகளில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் அதை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்துவோம்’ என தெரிவித்தார்.

Similar News