செய்திகள்
தொழுகை

நோன்பு கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தபடி தொழுகை செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2020-04-22 13:49 IST   |   Update On 2020-04-22 13:49:00 IST
ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தபடி தொழுகை செய்ய வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தி உள்ளார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதி முத்தவல்லிகள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நோன்பு கஞ்சிக்கான அரிசி மொத்தம் 97 மசூதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த மசூதிகளில் மொத்தம் 78,046 பேர் ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கிறார்கள்.

அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அரிசியின் அளவு 172889 கிலோ வழங்கப்படுகிறது. ரம்ஜான் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் வீட்டிலிருந்தபடி தொழுகை செய்து கஞ்சி தயார் செய்து அருந்த வேண்டும்.

மசூதியில் இவை செய்யக்கூடாது. கருகம்பத்தூர், கொணவட்டம், ஆர்.என்.பாளையம், சைதாப்பேட்டை, கஸ்பா, சின்ன அல்லாபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவுவதை தடுக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அங்கு இருப்பவர்கள் வெளியில் வரக்கூடாது. அங்கு வசிப்பவர்கள் முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். என்று ஜமாத்காரர்கள் எடுத்துக்கூற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், உதவி கலெக்டர் கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News