செய்திகள்
சத்துவாச்சாரி நேதாஜி நகரில் டோக்கன் வழங்கும் பணியை வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் இன்று தொடங்கி வைத்தார்.

வேலூரில் ரேசன் கடைகளில் ரூ.1000 வழங்க வீடு வீடாக டோக்கன்

Published On 2020-04-01 20:24 IST   |   Update On 2020-04-01 20:24:00 IST
வேலூரில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்க வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன.
வேலூர்:

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிவாரண அறிவிப்பாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இந்த மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அனைத்துப் பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 97 ஆயிரத்து 536 ரேசன் கார்டு காரர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையும் அத்தியாவசிய பொருட்களும் நாளைமுதல் வழங்கப்பட உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நெரிசலை தடுக்க ரேசன் கடைகளில் டோக்கன் முறை பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 50 ரேசன் கார்டுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் ரூ.1000 வழங்க முடிவு செய்துள்ளனர்.

இன்று வேலூரில் வீடு, வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. டோக்கன் பெற்றுக்கொண்ட அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் கடைகளுக்குச் சென்று நிவாரணத்தொகை பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 2 மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.

அட்டைதாரர்கள் யாருக்காவது பொருட்கள் வாங்குவதற்கு விருப்பமில்லை என்றால் தங்களது குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு www.tnpds. govt.in என்ற இணையதளம் அல்லது tnpds செயலி மூலம் தங்களது உரிமையை விட்டுக் கொடுக்கலாம். இது குறித்து சந்தேகங்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க விரும்பினால் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலக தொலைபேசி எண் 0416&2252586&ல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். பொருட்கள் வாங்குபவர்கள் வாகன சோதனையில் உள்ள போலீசாரிடம் டோக்கனை காட்டவேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News