செய்திகள்
புழல் ஜெயில்

கொரோனா வைரஸ்- ஜெயிலில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு தடை: டிஐஜி உத்தரவு

Published On 2020-03-17 11:49 IST   |   Update On 2020-03-17 11:49:00 IST
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள், கிளை சிறைகளில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சிறை கைதிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிறை கைதிகளை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். சென்னை புழலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல தமிழகத்தில் வேலூர், கோவை, சேலம், பாளையங்கோட்டை, கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள சிறைகளிலும் பல ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ளனர்.


கைதிகளைப் பார்க்க உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் அனுமதி பெற்று வருவது உண்டு. இதன்மூலம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தால் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள், கிளை சிறைகளில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 31ம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று சிறைத் துறை டி.ஐ.ஜி. முருகேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று, கைதிகளுக்கும் பரவக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்திக்க வரும் குடும்பத்தினர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா எனவும் பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News