செய்திகள்
யானை

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு - தென்னையை சேதப்படுத்திய ஒற்றை யானை

Published On 2020-03-11 10:28 GMT   |   Update On 2020-03-11 10:28 GMT
அந்தியூர் அருகே ஒற்றை யானை தோட்டத்தில் புகுந்து வாழை மற்றும் கரும்பு, தென்னை ஆகியவற்றை மிதித்து சேதப்படுத்தி உள்ளது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்தப் பகுதி மலைப் பகுதியின் அடிவாரப் பகுதியாக உள்ளதால் யானை மற்றும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது.

மேலும் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் உள்ள செக்போஸ்ட் அருகே விநாயகர் கோயில் எதிரில் உள்ள சாலையில் ஒற்றை யானை ஒன்று நடந்து வந்து விளை நிலங்களுக்குள் புகுந்து உள்ளது. இதனை பார்த்த அந்தப் பகுதி தோட்டத்து உரிமையாளர்கள் அந்த யானையை விரட்டினர்.

இதனையடுத்து மீண்டும் வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகே ராஜ்குமார் என்பவரது தோட்டத்தில் புகுந்து வாழை மற்றும் கரும்பு, தென்னை ஆகியவற்றை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. இதனை பார்த்த தோட்டத்து உரிமையாளர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டி விட்டனர்.

Tags:    

Similar News