செய்திகள்
நாகை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஹெராயின் பவுடர் அடங்கிய மரப்பெட்டியை படத்தில் காணலாம்.

நாகை மாவட்ட கடற்கரையில் ஹெராயின் பவுடருடன் கரை ஒதுங்கிய மரப்பெட்டி

Published On 2020-03-01 11:44 IST   |   Update On 2020-03-01 13:12:00 IST
நாகை மாவட்ட கடற்கரையில் ஹெராயின் பவுடருடன் கரை ஒதுங்கிய மரப்பெட்டியை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தனமாக கஞ்சாவை கடத்தி வருபவர்களை கடலோர பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து கடற்கரையோரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலோர காவல்படை போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களாக நாகை கடற்கரை பகுதியில் ஹெராயின் பொட்டலங்கள் அடங்கிய மரப்பெட்டிகள் கரை ஒதுங்கி வருகின்றன.

கடந்த மாதம் 25-ந் தேதி நாகையை அடுத்த வேளாங்கண்ணி அருகே செருதூர் கடலில் மரத்தினாலான பெட்டி ஒன்று மிதந்து வந்தது. இதைப்பார்த்த மீனவர்கள் கடலில் மர்ம பெட்டி மிதந்து வருவதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த மர்ம பெட்டியை கைப்பற்றி சோதனை செய்தனர்.

அதில் மிக கொடிய போதைப் பொருளான ஹெராயின் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வசம் ஹெராயின் பொட்டலங்கள் வந்த மரப்பெட்டியை ஒப்படைத்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் இந்த ஹெராயின் பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? அதன் மதிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கஞ்சா கடத்தலை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்துள்ள கடலோர காவல் படை போலீசாருக்கு இந்த ஹெராயின் பொட்டலங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக இன்று அதிகாலை வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரன் இருப்பு வடக்குஜல்லிகுளம் கடற்கரை பகுதியில் மரப்பெட்டி ஒன்று கரைஒதுங்கியது.

இதுகுறித்து கடலோர காவல்குழும போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் அந்த மரப்பெட்டியை சோதனை செய்தனர். அதில் ஹெராயின் பவுடர்கள் பலஅடுக்குகளில் நிரப்பப்பட்டு இருந்தது.

அதனை கைப்பற்றி திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நாகை கடற்கரை பகுதியில் அடிக்கடி கரை ஒதுங்கும் இந்த ஹெராயின் போதைப் பொருள் அடங்கிய மரப்பெட்டிகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது என்பது குறித்தும், மேலும் இதுபோன்று ஹெராயின் அடங்கிய மரப்பெட்டிகள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி கடலோர காவல் குழும போலீசார்கடற்கரை பகுதிகளிலும், படகு மூலம் கடலிலும் சென்று தேடி வருகின்றனர். இதுவரை கிடைக்கப்பெற்ற ஹெராயின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களால் நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

Similar News