செய்திகள்
பணம் திருட்டு

குன்னம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கி ரூ.1¾ லட்சம் பறிப்பு

Published On 2020-02-06 18:22 GMT   |   Update On 2020-02-06 18:22 GMT
குன்னம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கி ரூ.1¾ லட்சம் பறித்து சென்ற டவுசர் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள காடூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ்(வயது 46). அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ்(44). இவர்கள் இருவரும் நல்லறிக்கை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர். இதில் தன்ராஜ் இரவு விற்பனையை முடித்து விட்டு காடூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு செல்வது வழக்கம். அதேபோல் புதுவேட்டைக்குடி கிராமத்தில் அறை எடுத்து தங்கியுள்ளார் அருள்ராஜ். பின்னர் காலையில் விற்பனை தொகையை மேற்பார்வையாளர் ரமே‌ஷிடம் வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நல்லறிக்கை கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடையின் விற்பனையை முடித்து, கடையை பூட்டிவிட்டு மது விற்பனை தொகை ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 490-ஐ பையில் எடுத்துக்கொண்டு தன்ராஜ், அருள்ராஜ் இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வயல் பகுதி வழியாக வந்தனர்.

அப்போது டாஸ்மார்க் கடையில் இருந்து சிறிது தூரம் வயல் பகுதி வழியாக சென்றபோது டவுசர் மட்டுமே அணிந்திருந்த 4 பேர் வழிமறித்து தன்ராஜ் மற்றும் அருள்ராஜ் இருவரையும் தாக்கினர். நிலை குலைந்த நிலையில் அருள்ராஜிடம் இருந்த பண பையை பறித்துக்கொண்டு 4 பேரும் தப்பி ஓடினர்.

பின்னர் விற்பனையாளர்கள் தன்ராஜ், அருள்ராஜ் இருவரும் பொதுமக்கள் உதவியுடன் காட்டுப்பகுதியில் டவுசர் கொள்ளையர்களை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் படுகாயமடைந்த விற்பனையாளர்கள் இருவரும் வேப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன் மற்றும் குன்னம் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டவுசர் கொள்ளையர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News