செய்திகள்
கோப்பு படம்

குன்னூர் பஸ் நிலையத்தில் லைசென்ஸ் இல்லாத 4 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Published On 2020-01-08 10:01 GMT   |   Update On 2020-01-08 10:01 GMT
குன்னூர் பஸ் நிலையத்தில் லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.தங்க விக்னேஷ், குன்னூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன், ஊட்டி உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சிவராஜ், கூடலூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குன்னூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் காலாவதியான மற்றும் லேபிள் இல்லாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் குன்னூர் பஸ் நிலையத்தில் உரிமங்கள் இல்லாமல் செயல்பட்ட 4 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் கூறியதாவது:

நீலகிரி மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் பேரில் குன்னூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களில் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய லேபிள் ஒட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

அப்போது 20 கடைகளில் காலாவதியான மற்றும் லேபிள் இல்லாமல் உணவு பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து அதனை பறிமுதல் செய்து கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பஸ் நிலையத்தில் லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் உணவு பாதுகாப்பு மற்றும் லேபிள் உள்ள உணவு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கலப்படம் மற்றும் லேபிள் இல்லாமல் பொருட்கள் விற்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்சப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
Tags:    

Similar News