செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

கிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்

Published On 2019-11-13 17:47 GMT   |   Update On 2019-11-13 17:47 GMT
கிஷான் திட்டத்தில் பாரபட்சமின்றி விவசாயிகளை சேர்க்கக்கோரி வாய்மேடு அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு:

கிஷான் திட்டத்தில் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். இந்த திட்டத்தில் பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் அறிவொளி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர் நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியப்பன், மாவட்டகுழுவை சேர்ந்த வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கிஷான் திட்டத்தின் மூலம் நிலம் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர விவசாயிகள் தாங்கள் வைத்திருக்கும் நிலத்திற்கான ஆவணங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை வங்கி தகுதியான விவசாயிகளை பதிவு செய்யாததை கண்டித்தும், மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி விவசாய கடன், யூரியா, டி.ஏ.பி. உரங்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கிளைசெயலாளர்கள் இளவரசன், செந்தில் குமார், ஆனந்தன்உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News