செய்திகள்
டெங்கு காய்ச்சல்

வேலூரில் டெங்கு கொசு இருந்த 37 வீடு, நிறுவனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்

Published On 2019-10-18 10:58 GMT   |   Update On 2019-10-18 10:58 GMT
வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் டெங்கு கொசு புழுக்கள் இருந்த வீடு, நிறுவனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட 2 மடங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தார். அவர் படித்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

களப்பணியாளர்கள், சுயஉதவி குழுவினர், மாணவர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள், வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கொசு புழுக்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு முதன் முறையாக ரூ.25 ஆயிரமும், வீடுகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் இருந்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் கொசு இருந்தால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன் தலைமையில் பணியாளர்கள் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் வீடு வீடாக ஆய்வு செய்து டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் நடத்திய ஆய்வில் 37 இடங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் நிலை இருந்ததை கண்டுபிடித்து வீடு, நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News