செய்திகள்
நாயை கவ்வி பிடித்த சிறுத்தை.

ஆசனூர் அருகே வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை

Published On 2019-10-14 10:37 GMT   |   Update On 2019-10-14 10:37 GMT
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தையின் செயல் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இந்த சிறுத்தைகள் அவ்வப்போது ரோட்டை கடந்து செல்லும். மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் குடித்தபடி செல்லும். அதே சமயம் இப்போது அடர்ந்த காட்டுக்குள் திரியும் சிறுத்தைகள் ஊருக்குள் புகும் சம்பவம் தொடர் கதையாகி விட்டது.

தாளவாடி, ஆசனூர் மற்றும் தலமலை, பண்ணாரி, கேர்மாளம் போன்ற வனப்பகுதிகளிலிருந்து நள்ளிரவில் ஊருக்குள் புகும் சிறுத்தைகள் ஆடு மாடு மற்றும் நாய்களையும் வேட்டையாடி கொன்று குவித்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் உள்ள பங்களா வீட்டுக்குள் ஒரு சிறுத்தை சர்வ சாதாரணமாக புகுந்தது. அந்த சிறுத்தை பங்களா போர்டிகோ முன் நிறுத்தப்பட்டுள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மத்தியியில் காட்டுக்குள் எப்படி பதுங்கி மெதுவாக போவது போல் பதுங்கியபடி சென்று பங்களா வாசலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பு கலர் நாய் மீது பாய்ந்து அதன் கழுத்து பகுதியை கவ்வியது.

சுதாரித்த அந்த நாய் திமிறி சிறுத்தையிடமிருந்து தப்பி வெளியே ஓடியது. அந்த சிறுத்தையும் அந்த நாயை விரட்டியபடி பாய்ந்து ஓடியது.

இந்த மெய் சிலிர்க்கும் காட்சிகள் அந்த பங்களா முன் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி வாட்ஸ்-அப்பில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சத்தியமங்கலம் வனப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘முன்பெல்லாம் சிறுத்தை மற்றும் புலி போன்ற விலங்குகள் எல்லாம் ஊருக்குள் வருவது கிடையாது. இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதனால் நாங்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளோம். ஆகவே புலி, சிறுத்தை பேன்ற கொடிய விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூண்டுகள் வைத்து அதனை பிடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளனர். 

Tags:    

Similar News