செய்திகள்
குண்டேரிபள்ளம் அணை நிரம்பி வழிந்து நீர் வெளியேறும் காட்சி

ஒரே நாளில் 13 அடி உயர்ந்தது - தொடர் மழையால் குண்டேரிபள்ளம் அணை நிரம்பியது

Published On 2019-10-12 13:36 GMT   |   Update On 2019-10-12 13:36 GMT
டி.என்.பாளையம் அருகே தொடர் மழையால் ஒரே நாளில் 13 அடி உயர்ந்துள்ளதையடுத்து குண்டேரிபள்ளம் சுற்றியுள்ள பகுதியில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணை நிரம்பியது.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கொங்கர்பாளையம் கிராம பகுதியில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை.

42 அடி உயரம் கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் வாயிலாக 3000 ஏக்கர் விவசாய நிலங்களும் மறைமுக பாசனமாக 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அணையின் நீர்பிடிப்பு மலைப்பகுதிகளான, குன்றி, விளாங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கம்மனூர், கடம்பூர் போன்ற பகுதிகளில் பெய்த மழையால் நள்ளிரவு 2 மணியில் இருந்து குண்டேரிப்பள்ளம் அணைக்கு சுமார் 3000 கனஅடி அளவில் நீர்வரத்து வந்தது.

மலைபகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஒரே நாள் இரவில் அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்ந்து அணை நிரம்பியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 6 மணியில் இருந்து சுமார் 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்துள்ள நிலையில் அணை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

இந்த உபரிநீரானது பள்ளத்தூர், வாணிப்புத்தூர் போன்ற கிராம பகுதிகளின் வாய்க்கால் வழியாக காவேரி ஆற்றில் சென்று சேருகிறது.

இந்நிலையில், வாணிப்புத்தூர், கொங்கர்பாளையம், பள்ளத்தூர் போன்ற கிராம புறங்களில் வருவாய் துறை சார்பில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்டோரா போடப்பட்டு வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி வெளியேறும் தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News