செய்திகள்
ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்-மனு கொடுக்கும் போராட்டம்

Published On 2019-09-26 17:55 GMT   |   Update On 2019-09-26 17:55 GMT
ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்-மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து சமய நிறுவனங்களில், குடியிருப்போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை சட்டப் பிரிவு 34-ன் படி பல தலைமுறைகளாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கோவில் சொத்துகளில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், சிறு வணிகம் செய்வோருக்கும் அந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானித்து பயனாளிகளிடம் இருந்து கிரைய தொகையை தவணை முறையில் பெற்றுக்கொண்டு இடங்களை சொந்தமாக்கித் தர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்பவருக்கும் வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒன்றிய அமைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் இளவரசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் அம்பிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் இருந்த துணை தாசில்தார் பாஸ்கரிடம் மனு அளித்தனர்.

இந்த போராட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஜெயங்கொண்டம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News