செய்திகள்
மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்கம் உள்ளதா என அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆய்வு செய்த காட்சி

பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்களின் தாக்கம் உள்ளதா? அரசு தலைமை கொறடா ஆய்வு

Published On 2019-09-21 18:15 GMT   |   Update On 2019-09-21 18:15 GMT
விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்கம் உள்ளதா? என அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினயுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் வேளாண்மைத்துறையின் மூலம் வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், ஒட்டக்கோவில் மற்றும் ராயபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்கம் உள்ளதா? என அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினயுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அரசு கொறடா கூறியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் சராசரியாக 16 ஆயிரம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மக்காச்சோளத்தில் ராணுவப் படைப்புழு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் தடுக்க படைப்புழுக்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 653 எக்டர் பரப்பளவிற்கு மக்காச் சோளத்தில் ராணுவ படைப்புழுவின் தாக்குதலினால் பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக 16 ஆயிரத்து 472 விவசாயிகளுக்கு நிவாரணமாக இதுவரை ரூ.8 கோடியே 54 லட்சம் தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. இப்புழுவின் தாக்குதல் நடப்பாண்டிலும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் மையம் மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது இணை இயக்குனர் (வேளாண்மை) கிரு‌‌ஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் (வேளாண்மை) பழனிசாமி மற்றும் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி அலுவலர்கள் உள்பட விவசாயிகள் பலார் உடனிருந்தனர்.
Tags:    

Similar News