செய்திகள்
விநாயகர் சிலைகள்

வேலூரில் விநாயகர் சிலை நாளை ஊர்வலம் - சதுப்பேரி ஏரியில் கரைக்க ஏற்பாடு

Published On 2019-09-03 09:58 GMT   |   Update On 2019-09-03 09:58 GMT
வேலூரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. சிலைகளை கரைப்பதற்காக சதுப்பேரி ஏரியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
வேலூர்:

விநாயகர் சதுர்த்தி விழா வேலூர் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் முக்கிய இடங்களில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சிறிய வடிவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இந்த நிலையில் வேலூர் நகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாளை (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.

இதற்காக பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாளை மதியம் சத்துவாச்சாரிக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கிருந்து அவைகள் ஊர்வலமாக புறப்பட்டு சைதாப்பேட்டை பஜார், மண்டி வீதி வழியாக அண்ணா சாலைக்கு வந்து அதன் பின் சதுப்பேரி ஏரியை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக சதுப்பேரி ஏரியில் 30 அடி அகலத்தில், 15 அடி பள்ளம் ஏற்படுத்தப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டு வருகிறது.

சிலைகளை கரைக்க தாமதமானால் வெளிச்சம் தேவை என்பதால் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளதோடு சிலைகளை தூக்க 2 கிரேன்களும் கொண்டு வரப்படுகின்றன.

இந்த நிலையில் சிலைகளை கரைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பள்ளத்தில் 3 மோட்டார்கள் மூலம் நேற்று தண்ணீர் நிரப்பப்படும் பணிகளை வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார். மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன் உடனிருந்தார்.

Tags:    

Similar News