செய்திகள்
கோப்புப் படம்.

நாகையில் ஜவுளிக்கடையில் சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை

Published On 2019-08-12 12:50 GMT   |   Update On 2019-08-12 12:50 GMT
நாகையில் விலையுயர்ந்த கிளியை திருடி விற்ற சிறுவனை கடத்தி ஜவுளிக்கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்:

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் மன்சூர் (வயது 15). இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிறுவன் மன்சூர் , நாகப்பட்டினத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் 2 பேர் விலையுயர்ந்த பஞ்சவர்ண கிளியை கொடுத்து விற்று தருமாறு கூறியுள்ளனர். இதை ஏற்று மன்சூரும் அந்த கிளியை விற்றுகொடுத்தார். அதற்கு கமி‌ஷனாக ரூ.300-ம் பெற்றுக்கொண்டார்.

இதற்கிடையே கிளியின் உரிமையாளர் நாகை புதுத்தெருவை சேர்ந்த பரக்கத் அப்துல்லா (28) , காணாமல் போன கிளியை பற்றி விசாரித்தார். அப்போது சிறுவன் மன்சூர் கிளியை விற்றது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பரக்கத் அப்துல்லா மற்றும் அவரது நண்பர் தாரிக் (28) ஆகியோர் சிறுவன் மன்சூரை கிடாரங்கொண்டானில் இருந்து காரில் கடத்தி வந்தனர்.

பின்னர் நாகையில் அவர்களுக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் சிறுவன் மன்சூரை கொண்டு சென்றனர். அங்கு மன்சூரின் கை- கால்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்தனர். இதனால் மன்சூர் வலி தாங்க முடியாமல் அலறினான்.

இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர் , சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே மன்சூரை கட்டி வைத்து சிலர் தாக்குவதை கண்டு திடுக்கிட்டனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் பொதுமக்கள் கூட்டத்தை பார்த்து தப்பி ஓடி விட்டனர்.

உடனே இதுபற்றி நாகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுவன் மன்சூரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நாகை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவனை கடத்தி ஜவுளிக்கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News