செய்திகள்
நீல நிற பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதரை படத்தில் காணலாம்.

10 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்த பக்தர்கள்

Published On 2019-08-12 02:41 GMT   |   Update On 2019-08-12 02:41 GMT
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறார். 42-வது நாளான நேற்று அத்திவரதர் நீல நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி என்பதாலும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்.

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி மூலம் அத்திவரதரை தரிசிக்க அழைத்து செல்லப்பட்டனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்களும் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்படும் பக்தர்கள் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்துவந்து அத்திவரதரை தரிசித்தனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். நேற்று பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.

நேற்று இரவு 7 மணிவரை 2½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். மேலும் 1½ லட்சம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். காத்திருக்கும் பக்தர்கள் நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.


Tags:    

Similar News