செய்திகள்
மயிலாடுதுறையில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

மயிலாடுதுறையில் தனியார் பஸ் பறிமுதல் - மாற்று பஸ் இயக்காததால் 45 பயணிகள் பரிதவிப்பு

Published On 2019-08-10 10:39 GMT   |   Update On 2019-08-10 10:39 GMT
மயிலாடுதுறையில் பர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட தனியார் பஸ்சை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:

சென்னையில் இருந்து மயிலாடுதுறை, பாண்டிச்சேரி வழியாக ராமேஸ்வரம் வரை செல்லக்கூடிய ஒரு தனியார் பஸ்சில் பயணிகள் நேற்று முன்பதிவு செய்து இருந்தனர். இரவு 9 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து பஸ் புறப்படும் என தனியார் பஸ் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் பஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் கேட்டபோது மாற்று ஏற்பாடாக இரவு 11 மணிக்கு வேறு பஸ்சை தனியார் பஸ் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து அந்த பஸ்சில் முன்பதிவு செய்த பயணிகள் சுமார் 45 பேர் புறப்பட்டனர். அந்த பஸ் இன்று காலை நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு வந்தது. அப்போது மாற்று பஸ்சிற்கு உரிய பர்மிட், மற்றும் எந்த ஆவணமும் இல்லாமல் தனியார் பஸ் வந்ததாக தெரிகிறது. அந்த பஸ் மயிலாடுதுறை வந்தபோது ஆர்.டி.ஓ. பஸ்சை நிறுத்தி சோதனையிட்டார். அப்போது பஸ்சை உரிய பர்மிட் இல்லாமல் இயக்கியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள தனியார் பஸ் நிர்வாகத்தின் கிளை அலுவலகத்துக்கு பஸ்சை கொண்டு சென்று பஸ்சில் இருந்த 45 பயணிகளையும் இன்று காலை 6 மணியளவில் இறக்கி விட்டுவிட்டு பஸ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர்.இதனால் சென்னையில் இருந்து மயிலாடுதுறை, மீமிசல், முத்துப்பேட்டை வழியாக ராமேஸ்வரம் வரை செல்லக்கூடிய ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பயணிகள் 45 பேரும் மாற்று பஸ்சுக்காக காத்திருந்தனர். வெகுநேரம் காத்திருந்த பயணிகள் தனியார் பஸ்சின் கிளை அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் மாற்று பஸ் எப்போது வரும் என்று கேட்டபோது 10 நிமிடங்களில் வந்துவிடும் என்று கூறியுள்ளனர். ஆனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாகியும் மாற்று ஏற்பாடுகளை தனியார் பஸ் நிர்வாகத்தினர் செய்யாததால் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இந்த சம்பவத்தால் இன்று காலை மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News