செய்திகள்
இன்று பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்தி வரதர்

காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்: அத்தி வரதர் தரிசனம் 17-ந்தேதி ரத்து

Published On 2019-08-08 07:36 GMT   |   Update On 2019-08-08 07:36 GMT
அத்தி வரதர் தரிசன நிறைவு நாளான 17-ந்தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி முதல் விமரிசையாக நடந்து வருகிறது.

கடந்த 31-ந் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை வழிபட கடந்த 7 நாட்களாக தினமும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் குவிந்து வருவதால் காஞ்சிபுரம் நகரமே குலுங்கி வருகிறது.

தமிழகத்தின் வெளிமாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

நேற்று மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது. காஞ்சிபுரத்தின் எல்லையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நடந்து வந்தனர்.

கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து அவர்கள் அத்திவரதரை வழிபட்டனர்.



39-வது நாளான இன்றும் காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. அத்திவரதரை தரிசனம் செய்ய இன்னும் 9 நாட்களே இருப்பதால் இன்று பக்தர்கள் வருகை அதிகரித்தது. அடுத்த வாரம் முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அத்திவரதர் தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் விதித்து உள்ளது.

அதன்படி அத்தி வரதர் தரிசன நிறைவு நாளான 17-ந்தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அத்திவரதர் தரிசனம் 16-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அன்று வரும் பக்தர்கள் 16-ந்தேதி இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந்தேதி அத்திவரதர் சிலைக்கு ஆகம விதிப்படி சடங்குகள் நடைபெற உள்ளது. எனவே 17-ந்தேதி அன்று அத்திவரதர் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

பூஜைகள் முடிந்த பின்பு 17-ந்தேதி இரவு அத்திவரதர் சிலை அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும்.

கடந்த 38 நாட்களில் இதுவரை 70.25 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். சராசரியாக தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று இரவு தரிசன நேரம் முடிந்தும் 1½ லட்சம் பக்தர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் 2-வது நாளாக தவித்தபடி தரிசனத்துக்காக வரிசையில் காத்துநின்று வழிபட்டு சென்றனர்.

அத்திவரதர் இன்று மஞ்சள் நிற வண்ண பட்டாடை மற்றும் இரு கைகள் மற்றும் தோள்களிலும் பச்சை கிளிகளை வைத்தபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பெருமாளின் இந்த அபூர்வமான கோலத்தினை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருக்கிறார்கள். பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் மாடவீதிகள் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

ரங்கசாமி குளத்தில் இருந்து திருக்கச்சி நம்பி தெரு வழியாக பக்தர்களை நிறுத்தி தரிசனத்துக்கு போலீசார் அனுப்பி வருகிறார்கள்.

தற்போது வி.ஐ.பி. வரிசைகளில் கடும் கூட்டம் அலைமோதுகிறது. வரும் நாட்களில் கூடுதல் நெரிசல் ஏற்படும் என்பதால் அந்த பாதை இன்று மாற்றி அமைக்கப்பட்டது.

வழக்கமாக வி.வி.ஐ.பி- வி.ஐ.பி.க்கள் மேற்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு செல்வது வழக்கம். அதே பாதையில் பொது தரிசன பக்தர்கள் திரும்பி வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனை தடுக்க தற்போது வி.ஐ.பி. தரிசனம் செல்லும் பாதையில் கம்பு, பலகைகள் மூலம் தற்காலிக பாலம் போன்று கட்டப்பட்டு உள்ளது.

இந்த பாலம் வழியாக செல்லும் வி.வி.ஐ.பி.க்கள் அதே வழியாக திரும்பி வர வேண்டும். வி.ஐ.பி.க்கள் அதே வழியாக சென்று பொது தரிசன பாதையில் வரும் பக்தர்களுடன் சேர்ந்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் தரிசனம் முடிந்து வெளியே வரும் பொது தரிசன பாதையில் கூடுதல் இடம் கிடைப்பதால் பக்தர்கள் நெரிசல் இன்றி வரமுடியும்.

இந்த பணி நடப்பதை அடுத்து இன்று காலை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தரிசனத்துக்கு வந்த அவர்கள் கோவிலில் காத்து நின்றனர்.

இதேபோல் பொது தரிசனத்துக்கும் அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தாமதமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.க்கள் அனைவரும் பாலம் அமைக்கும் பணி முடிந்ததும் இன்று மதியத்துக்கு பின்னர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அத்திவரதரை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் நேற்று வரிசையில் காத்திருந்த போது மின்சாரம் தாக்கியதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தொடர் விடுமுறை வருவதால் வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News