செய்திகள்
ப.சிதம்பரம்

தமிழ் மொழியை காக்க தமிழில் பேச வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்தல்

Published On 2019-07-22 18:00 GMT   |   Update On 2019-07-22 18:00 GMT
தமிழ் மொழியை காக்க தமிழில் பேசவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி பேசினார்.
காரைக்குடி:

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பாரதிதாசன் தமிழ் பேரவையின் சார்பில் 27-ம் ஆண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா நடைபெற்றது. விழாவிற்கு தி.மு.க. மாநில இலக்கிய அணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான தென்னவன் தலைமை தாங்கினார். பாரதிதாசன் தமிழ் பேரவை நிறுவனர் சாமி திராவிடமணி வரவேற்றார். கம்பன் அறநிலைய தலைவர் சக்தி திருநாவுக்கரசு தொடக்க உரை நிகழ்த்தினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதிய தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் என்ற நூலினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் வெளியிட உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் அய்க்கண் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பெரியார் சாக்ரடீசு சாதனையாளர் விருதினை சண்முகசுந்தரம் மற்றும் காரைக்குடி நகர்மன்ற உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா ஆகியோருக்கு முன்னாள் அமைச்சர் தென்னவன் வழங்கினார். தமிழக அரசின் அண்ணா விருது பெற்ற பேராசிரியர் அய்க்கண் மற்றும் மத்திய அரசின் புரஸ்கார் விருது பெற்ற தேவி நாச்சியப்பன் ஆகியோருக்கு கலிபூங்குன்றன் பொன்னாடை அணிவித்து நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.

விழாவில் முன்னாள் மத்திய மந்திரி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:- 

செந்தமிழ் செம்மொழியாக மட்டும் நின்றுவிடக்கூடாது.தமிழ் இலக்கிய மொழி என்று மட்டுமே பெருமை கொள்கிறோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழிகளான ஹீப்ரு, லத்தீன், சுமேரிய மொழிகள் அழிந்துவிட்டன. வடமொழியில் கூட பேசும் பழக்கம் ஒரு சில ஆயிரம் பேராக சுருங்கி விட்டது. ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழியான தமிழ் மொழி இன்றும் நிலைத்து நிற்கிறது. வழக்கத்தில் இருக்கிறது பேசும் மொழியாக இருக்கிறது, தாய் மொழியாக இருக்கிறது. இது நமக்கு பெருமை தரும் விஷயமாகும். செந்தமிழை செழுந்தமிழாகச்செய்தல் வேண்டும்.

எத்தனையோ தமிழர்கள் இந்திய அறிவியல் ஆய்வகங்களில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் செயல்பாடுகளையும் தமிழில் விளக்க முடியுமா, இது குறித்து தமிழில் படம் எடுக்க முடியுமா, அவ்வாறு முடியும் என்கிற நிலைமை வந்தால் தமிழ் மேலும் 3000 ஆண்டுகள் நீடிக்கும். செந்தமிழ் செழுந்தமிழாக மாறும். தமிழ் மொழியை காக்க அனைவரும் தமிழ் மொழியிலேயே பேச வேண்டும். தமிழிலேயே எழுத வேண்டும். தமிழ் நூல்களைப் பரிசாக வழங்க வேண்டும்.

இந்தியனாக இருப்போம் ஆனால் இனத்தால் தமிழனாக இருப்போம். இந்தி அல்லாத மொழிகளுக்கு ஒரு பேராபத்து காத்திருக்கிறது. ஒரே நாடு ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே வாழ்வியல் முறை இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. ஒலியில் பிறந்ததே மொழி. பின்னரே எழுத்து, பின்னரே சொல் எனவே எங்கும் தமிழோசை எப்போதும் கேட்க வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழியை காக்க முடியும். 

இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரைராஜ், சுந்தரம், தி.மு.க. தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் அசோகன், தி.மு.க. நகரச் செயலாளர் குணசேகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் மாங்குடி, தி.க. மாவட்டத்தலைவர் அரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News