செய்திகள்
கைதி தப்பி ஓட்டம்

வேலூர் ஜெயிலில் கைதி தப்பி ஓட்டம் - சிறைக்காவலர்கள் மீது நடவடிக்கை

Published On 2019-07-04 09:27 GMT   |   Update On 2019-07-04 09:27 GMT
வேலூர் ஜெயிலில் கைதி தப்பி ஓடியதையடுத்து பணியில் இருந்த 4 சிறைக்காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த அருணகிரி மங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இளம்பெண் கடத்தல், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யபட்டு 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

வேலூர் ஜெயிலில் நன்னடத்தை கைதிகள் சிலர் ஜெயிலுக்கு வெளியில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று ஜெயிலுக்கு வெளியே உள்ள தோட்டத்தில் ரமேஷ் உள்பட நன்னடத்தை கைதிகள் சிலர் குழுக்களாக பிரிந்து வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களை சிறைக்காவலர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். பகல் 12.30 மணிக்கு அனைவரும் மதிய உணவுக்காக மீண்டும் சிறைக்கு சென்றனர். அப்போது வெளியே சென்ற அனைத்து கைதிகளும் வந்துவிட்டார்களா என்று சிறை காவலர்கள் பார்த்தபோது கற்பழிப்பு வழக்கில் கைதான ரமேஷை மட்டும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறைக்காவலர்கள் விவசாய தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கும் அவரை காணவில்லை. அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஜெயில் கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் தெரியாமல் தப்பி ஓடியது தெரியவந்தது.

உடனடியாக இதுபற்றி சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடைய உத்தரவின் பேரில் பாகாயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தப்பி ஓடிய கைதியின் வீட்டுக்கும் சென்று தேடி பார்த்தனர். அவர் அங்கும் செல்லவில்லை. தொடர்ந்து அவரது கிராமத்தில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயில் கைதி தப்பி ஓடியபோது பணியில் இருந்த 4 சிறைக்காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வேலூர் ஜெயிலில் கடந்த ஆண்டும் இதுபோன்று கைதி ஒருவர் ஜெயிலின் மதில் சுவரில் உள்ள கம்பியில் வேட்டியை கட்டி அதன் வழியாக தப்பி ஓடினார். தற்போது மேலும் ஒரு கைதி தப்பி ஓடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News