செய்திகள்
கல்விக்கொள்கை நகல் எரிப்பு- மாணவர்கள் கைது
புதுக்கோட்டையில் தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
ஒரே தேசம், ஒரே மொழி, ஒற்றை கலாச்சாரத்தை முன்னிறுத்தி இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையிலும், ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை காவுவாங்கும் விதத்திலும் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை உள்ளதால் இந்திய மாணவர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஓவியா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நித்திஸ், சந்தோஷ், அகத்தியன், ராஜி, கார்த்திகா உள்ளிட்ட 22 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.