செய்திகள்
கோப்புப்படம்

தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று பொய் சொல்வதா?- அமைச்சர் வேலுமணிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published On 2019-06-18 06:34 GMT   |   Update On 2019-06-18 06:34 GMT
தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் வேலுமணி பொய் சொல்வதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நாளுக்கு நாள் குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதுவரையில் குளிக்க தண்ணீர் இல்லாத நிலையில் இன்று குடிக்க தண்ணீர் இல்லாத நிலைமை வந்து விட்டது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது.

ஆனால் தமிழக குடிநீர் வடிகால் துறை அமைச்சர் தண்ணீர் பிரச்சனை எதுவும் இல்லை என்று பொய் சொல்கிறார். ஒரு அமைச்சர் தவறான தகவல்களை தரக்கூடாது என்பது விதி. ஒரு அரசாங்கம் பொய் சொல்லக்கூடாது. இது சட்டப்படி குற்றம். இதற்காகவே இந்த அரசைக் கலைக்கலாம்.

ஒரு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறதா என்று பார்ப்பதற்கு பாராளுமன்றம், சட்டமன்றம் உறுதி மொழி குழு என்று ஒன்று இருக்கிறது. எல்லோருக்கும் தண்ணீர் கொடுப்போம் என்று சொல்லி இந்த அரசாங்கம் யாருக்கும் தண்ணீர் கொடுக்கவில்லை.

இதற்கு காரணம் ஏரி குளங்களை தூர்வாராததுதான். நீர் நிலைகளை தூர்வாரினால் இந்த அரசுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் அதிகம் லாபம் கிடைக்கும்.

இவர்கள் மழை வரும் காலங்களில் தூர்வருவார்கள். முதல் நாள் தூர்வாரும்போது அடுத்த நாள் மழை வந்துவிடும் உடனே தூர்வாரியதாக கணக்கு காட்டி அதில் லாபம் பெறுவார்கள். இந்த அரசுக்கு மக்கள் முக்கியமல்ல லாபம் மட்டுமே முக்கியம்.

இதனால்தான் சென்னை, கோவை, சேலம் மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பக்கத்து மாநில முதல்- அமைச்சர்களை சந்தித்து 2 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு பெற்று தந்தாலே குடிதண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும். அதை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்பெ‌ஷல் பேக்கேஜ் என்று ஒன்று உண்டு. பிரதமர் அதை தமிழகத்திற்கு கொடுக்கலாம். அதற்கு தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும். வறட்சி மாநிலம் என்று அறிவித்தால் பல நிதிகளை மத்திய அரசிடம் இருந்து நாம் பெற முடியும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதை அறிவிப்பதற்கு தமிழக அரசு சுணக்கம் காட்டி வருகிறது.


ஹைட்ரோ கார்பன், மீத்தேன், மூம்மொழி கொள்கை பற்றியான தன்னுடைய கொள்கை, தன் அரசின் கொள்கையை முதலமைச்சர் தெளிவாக சொல்ல வேண்டும். இதுவரை முதல்-அமைச்சர் எந்த ஒரு தெளிவான கருத்தையும் கூறவில்லை.

மத்திய அரசு என்பது தமிழக அரசுக்கு எஜமானன் அல்ல. நம்மோடு இணையாக இருக்கின்ற ஒரு அரசு. மத்திய அரசு, மாநில அரசை கட்டுப்படுத்த முடியாது. சில விதிமுறைகளை பின்பற்றினால் பிரச்சனை இல்லை. இங்கே இருக்கிற அ.தி.மு.க. அரசுக்கு மடியில கனம் அதனால் கருத்து சொல்ல அச்சப்படுகிறார்கள். மத்திய அரசால் மம்தா பானர்ஜியை மிரட்ட முடியுமா?

தி.மு.க.வை அழித்தால் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும் என்று எச்.ராஜா சொல்லியிருப்பது அவர் தேர்தல் தோல்வியின் விரக்தியில் பேசுவார். அவர் நல்ல மனநிலையோடு சொல்லி இருந்தால் சொல்லுங்கள் அதற்கு பதில் தருகிறேன்.

ஒரு அரசியல் இயக்கத்தை அழிக்க முடியும் என்பது எப்படி சாத்தியமாகும். தி.மு.க. வலுவோடு இருப்பதனால் அதற்குரிய இடத்தை பிடித்திருக்கிறது. அழிப்பேன் என்று சொல்வது சர்வாதிகாரத்தனம். அது தவறானது.
Tags:    

Similar News