செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவி கடத்தல்- ராணுவ வீரர் மீது புகார்

Published On 2019-06-07 17:28 IST   |   Update On 2019-06-07 17:28:00 IST
ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவியை கடத்தியதாக ராணுவ வீரர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிரபாகரன் (27). ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

விடுமுறையில் ஊருக்கு வந்த பிரபாகரன் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் மாணவி கிடைக்கவில்லை.

இதையடுத்து ராணுவ வீரர் பிரபாகரன் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குபதிவு செய்து பிரபாகரன் மற்றும் பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Similar News